6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை விரைந்து தொடங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாடு, 08 ஜூலை (ஹி.ச.) தமிழகத்தில் 6 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக (Deemed University) மாறுவதால், மாநில அரசின் ஒதுக்கீட்டில் கிடைத்து வந்த 700 எம்.பி.பி.எஸ். இடங்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக பா.ம.க. தலைவர் அன
அன்புமணி


தமிழ்நாடு, 08 ஜூலை (ஹி.ச.)

தமிழகத்தில் 6 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக (Deemed University) மாறுவதால், மாநில அரசின் ஒதுக்கீட்டில் கிடைத்து வந்த 700 எம்.பி.பி.எஸ். இடங்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதனால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த 700 மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;

சென்னை புனித பீட்டர், தனலட்சுமி சீனிவாசன், சீனிவாசன் மருத்துவக் கல்லூரிகள் ஏற்கனவே நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறியதால் 350 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இழக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 கல்லூரிகள் அதே நிலைக்கு மாற உள்ளதால் கூடுதலாக 350 இடங்கள் இழக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனியார் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறினால், தற்போது ரூ.4.35 லட்சம் முதல் ரூ.5.40 லட்சம் வரை உள்ள கட்டணத்திற்கு பதிலாக ரூ.23 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை செலுத்த வேண்டிய நிலை உருவாகும் என்பதால், ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் மருத்துவக் கல்வியைத் தொடர முடியாத சூழல் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை ஈடுகட்டும் வகையில், மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி மற்றும் பெரம்பலூர் ஆகிய 6 மாவட்டங்களில் தலா 150 இடங்களுடன் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல், தற்போது 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் மட்டுமே உள்ள 16 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 கூடுதல் இடங்களை உருவாக்கி, மருத்துவக் கல்வி வாய்ப்புகளை அதிகரிக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam