Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 08 ஜூலை (ஹி.ச.)
பிற்படுத்தப்பட்ட (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC), சீர்மரபினர் (DNC) மற்றும் பட்டியல் சாதியினர் (SC) இஸ்லாம் மதத்திற்கு மாறினால், அவர்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்களாக (BCM) கருதி சமூகச் சான்றிதழ் வழங்கலாம் என்று தமிழக அரசு 2024 மார்ச் 9-ஆம் தேதி வெளியிட்ட அரசாணையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கடந்த ஜூன் 25-ஆம் தேதி அரசியலமைப்புக்கு முரணானது என்று கூறி ரத்து செய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சமீர் அகமது (முன்னாள் பெயர் பரமசிவம்) தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பி.பி. பாலாஜி அடங்கிய அமர்வு, இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஒருவர் குறிப்பிட்ட பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கோர முடியாது; அவர் ஒரு முஸ்லிம் மட்டுமே என்று தீர்ப்பளித்தது.
மேலும், அரசாணை நடைமுறையில் இருந்தால் அரசியலமைப்புச் சட்டக் கோட்பாடுகளுக்கு முரணாக அமையும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
சமூகநீதி மற்றும் இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலேயே 2024-ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டதாகவும், உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து அரசாணையை மீண்டும் அமல்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு தனது மேல்முறையீட்டு மனுவில் கோரியுள்ளது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், மதமாற்றம், சமூகச் சான்றிதழ் மற்றும் இடஒதுக்கீட்டு உரிமைகள் தொடர்பாக முக்கிய சட்ட விவாதமாக இது உருவெடுத்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam