Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஜூலை (ஹி.ச.)
தனியார் பள்ளிகள், தாங்கள் வசூலிக்கும் கல்விக் கட்டண விவரங்களை பள்ளியின் அறிவிப்பு பலகையில் கட்டாயம் வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். தண்டபாணி, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ், பள்ளிகள் கல்விக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் எனத் தெரிவித்தார்.
அதேவேளையில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) தனியார் பள்ளிகளுக்கு நேரடியாக பொருந்தாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
மேலும், கல்விக் கட்டணங்களை பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநரகம் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் நீதிமன்றம் முடித்து வைத்தது.
இந்தத் தீர்ப்பின் மூலம், தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி கல்விக் கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டிய கடமை இருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b