Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 08 ஜூலை (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக வங்கக் கடலில் நிலவிய கடுமையான காற்று மற்றும் சீற்றம் காரணமாக மீன்பிடிக்கச் செல்லாமல் கரையில் தங்கியிருந்த மீனவர்கள், தற்போது காற்றின் வேகம் குறைந்து கடல் இயல்பு நிலைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து மீண்டும் மீன்பிடிக்கக் கடலுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
ராமேஸ்வரம், மண்டபம், சோழியாக்குடி, தேவிபட்டணம் உள்ளிட்ட முக்கிய மீன்பிடி துறைமுகங்களில் இருந்து சுமார் 2500 விசைப்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் விசைப்படகு மீனவர்கள் மீன்துறை டோக்கன் அலுவலகத்தில் அனுமதி டோக்கன் பெற்று வழக்கம்போல இன்று அதிகாலை ஒரே நேரத்தில் கடலுக்குள் சென்றனர்.
தொடர் காற்று காரணமாக மீன்பிடி தடைபட்டிருந்த நிலையில், வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பையடுத்து மீன்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.
நான்கு நாட்களாக வருமானம் இன்றி தவித்த மீனவ குடும்பங்கள் தற்போது நம்பிக்கையுடன் மீன்பிடிக்கச் சென்றுள்ளன.
இதனால் ராமநாதபுரம் மாவட்ட மீன்பிடி துறைமுகங்கள் மீண்டும் பரபரப்படைந்துள்ளன.
மீனவர்கள் திரும்பி வந்ததும் மீன் வரத்து அதிகரிக்கும் என்றும், இதனால் மீன்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b