Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஜூலை (ஹி.ச.)
சென்னை செங்குன்றம் அடுத்த பொத்தூர், வள்ளிவேலன் நகரைச் சேர்ந்தவர் சாய் சாந்தகுமார் (43). ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி கௌசல்யா (40). இந்த தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பொத்தூர் பகுதியில் குடியேறிய சாந்தகுமார், அங்கு கருப்பசாமி கோயில் அமைத்து சாமியாராக குறி சொல்லி வந்துள்ளார்.
அங்கு கோயிலுக்கு வழிபாட்டிற்காக வரும் பெண்களிடம் நெருக்கமாக பழகி ஏமாற்றியதாகவும், இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கொளத்தூரை சேர்ந்த சரிதா (45) என்பவர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், பொத்தூர் பகுதியில் கருப்பசாமி கோயில் அமைத்து சாமியாராக குறி சொல்லி வந்த சாய் சாந்தகுமார் தனது பொறியியல் படித்த 22 வயது மகளிடம் நெருங்கி பழகி, ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த முதல் மனைவி கௌசல்யா, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் சாந்தகுமார் பல பெண்களுடன் தொடர்பில் இருந்து வந்ததும், 2017 ஆம் ஆண்டு முதல் மனைவிக்கு தெரியாமல் மற்றொரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது. மேலும் இரண்டாவது திருமணத்தில் அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பின்னர், இரண்டாவது மனைவி பிரிந்து சென்றதைத் தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டு முதல் மனைவி கௌசல்யாவிடம் மன்னிப்பு கேட்டு, அவருடன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் குறி கேட்க வந்த பொறியியல் படித்த 22 வயது இளம்பெண்ணை மூன்றாவது திருமணம் செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து முதல் மனைவி உயிருடன் இருக்கும் நிலையில் விவாகரத்து பெறாமல் மறுமணம் செய்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், சாய் சாந்தகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Hindusthan Samachar / ANANDHAN