ஆர்.டி.ஓ-வின் புதிய ‘H’ வடிவ ஓடுதளத்தால் ஓட்டுநர் உரிமம் பெற முடியாமல் மக்கள் அவதி
தூத்துக்குடி, 08 ஜூலை (ஹி.ச.) தொழில் நகரமாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் தினமும் நூற்றுக்கணக்கிலான சரக்கு வாகனங்கள் ஏற்றுமதி, இறக்குமதி பணிகளுக்காக வந்து செல்கின்றன. இதனால் புதிய ஓட்டுநர் உரிமம் பெறவும், பழைய உரிமங்களை புதுப்பிக்கவும், தன
H runway


தூத்துக்குடி, 08 ஜூலை (ஹி.ச.)

தொழில் நகரமாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் தினமும் நூற்றுக்கணக்கிலான சரக்கு வாகனங்கள் ஏற்றுமதி, இறக்குமதி பணிகளுக்காக வந்து செல்கின்றன.

இதனால் புதிய ஓட்டுநர் உரிமம் பெறவும், பழைய உரிமங்களை புதுப்பிக்கவும், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் பொதுமக்களும் ஏராளமானோர் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தை (RTO) நாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த மாதம் 8-ஆம் தேதி தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமத் தேர்வுக்காக பயன்படுத்தப்பட்ட பழைய ஓடுதளம் மாற்றப்பட்டு, நவீன வசதிகளுடன் 'H' வடிவிலான புதிய தானியங்கி (சென்சார்) ஓடுதளம் அமைக்கப்பட்டது.

புதிய ஓடுதளத்தில் இருபுறமும் வெள்ளை நிற எல்லைக் கோடுகள் வரையப்பட்டுள்ளதுடன், முழுப் பகுதியும் கண்காணிப்பு கேமராக்களால் கண்காணிக்கப்படுகிறது. மேலும், ஓடுதளத்தை அடைவதற்கு முன்பாக சிறிய மேம்பாலம் மற்றும் அணுகுமுறை சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடுதளத்தை 150 வினாடிகளுக்குள் முழுமையாக கடந்து தேர்வை நிறைவு செய்ய வேண்டும் என்ற நடைமுறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், இந்த புதிய ஓடுதளம் மிகவும் குறுகலாக வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், மாருதி 800 போன்ற சிறிய கார்கள் மட்டுமே எளிதாக இயக்கும் வகையில் இருப்பதாகவும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்துநர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பெரிய ரக கார்களை பயன்படுத்துவோர் தேர்வை வெற்றிகரமாக முடிப்பது கடினமாக இருப்பதாக கூறுகின்றனர்.

மேலும், வாகனத்தின் சக்கரம் மட்டுமல்லாமல், வாகனத்தின் நிழல் கூட வெள்ளைக்கோட்டின் மீது பட்டாலோ அல்லது வாகனத்தின் உடல் பகுதி கோட்டை லேசாக மறைத்தாலோ சென்சார் தானாகவே 'தேர்ச்சி பெறவில்லை' என்று பதிவு செய்கிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதோடு, நிர்ணயிக்கப்பட்ட 150 வினாடிகளுக்குள் ஓட்டி முடிக்காதது, அதிக வேகத்தில் இயக்கியது, H வடிவில் பின்னோக்கி இயக்கும்போது குறிப்பிட்ட எல்லையை சரியாக அடையாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் தேர்வில் தோல்வி என கணினி தானாக பதிவு செய்வதாக கூறப்படுகிறது. இதனால், வாகனத்தை சரியாக இயக்கியவர்கள் கூட மீண்டும் மீண்டும் விண்ணப்பித்து தேர்வில் பங்கேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

முன்னதாக தினமும் 30 முதல் 50 பேர் வரை ஓட்டுநர் உரிமத் தேர்வுக்கு வந்த நிலையில், புதிய ஓடுதளம் அமைக்கப்பட்ட பிறகு கடந்த ஒரு மாதத்தில் சுமார் 29 பேர் தேர்வில் பங்கேற்றதாகவும், அதில் 28 பேர் தோல்வி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. ஒருவர் மட்டும் சென்சார் கோளாறு ஏற்பட்ட நாளில் தேர்வில் பங்கேற்றதால் தேர்ச்சி பெற்றதாக கூறப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஓட்டுநர் உரிமம் பெற இரண்டாவது முறையாக தேர்வுக்கு வந்த ஒருவரும் மீண்டும் தோல்வி அடைந்ததாக கணினி பதிவு செய்துள்ளது. இதையடுத்து புகாரின் பேரில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள், இந்த சென்சார் அமைப்பை நிறுவிய நிறுவனத்தின் பொறியாளரை வரவழைத்து அதே ஓடுதளத்தில் வாகனத்தை இயக்கச் செய்துள்ளனர்.

ஆனால், ஆந்திர மாநிலத்திலிருந்து தனது சொந்த காரில் வந்த அந்த பொறியாளருக்கே, சென்சார் அமைப்பு ‘தேர்ச்சி பெறவில்லை’ என்று பதிவு செய்தது. இதனால், சென்சார் அமைப்பின் செயல்திறன் குறித்த கேள்விகள் மேலும் வலுத்துள்ளன.

புதிய ஓடுதளம் அறிமுகமான பிறகு தொடர்ந்து பலர் தோல்வியடைந்ததால், தற்போது ஓட்டுநர் உரிமம் பெற வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. முன்பு தினமும் 30 முதல் 50 பேர் வரை வந்த நிலையில், தற்போது ஒருவர் கூட வராத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலக வளாகமே வெறிச்சோடி காணப்படுகிறது.

எனவே ‘H’ வடிவிலான புதிய ஓடுதளத்தை அகலப்படுத்த வேண்டும் அல்லது தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளதா? என்பதை உயரதிகாரிகள் நேரடியாக ஆய்வுசெய்து உறுதிசெய்த பின்னரே, பொதுமக்களுக்கு தேர்வு நடத்த வேண்டும் என ஓட்டுநர்கள் மற்றும் பயிற்சி பள்ளி நடத்துநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், புதிய சென்சார் ஓடுதளத்தில் தேர்வுக்கு முன்பு வாகன ஓட்டிகள் பயிற்சி பெறும் வகையில் தனி பயிற்சி ஓடுதளத்தையும் அரசு அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Hindusthan Samachar / ANANDHAN