Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஜூலை (ஹி.ச.)
அதிமுகவின் அமைப்பு வலுப்படுத்தல் மற்றும் 2031 சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளின் ஒரு பகுதியாக, எடப்பாடி கே. பழனிசாமி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் இன்று திருச்சி மற்றும் நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
காலை 10 மணிக்கு தொடங்கிய முதல் கட்ட ஆலோசனையில், திருச்சி மாநகர் மாவட்டத்தின் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் பங்கேற்றனர்.
தொடர்ந்து, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தின் மணப்பாறை மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர் ஆர். மனோகரன் தலைமையில் ஆலோசனையில் கலந்து கொண்டனர்.
இதையடுத்து காலை 11 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது கட்ட ஆலோசனையில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தின் முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர் தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர் யோகநாதன், மேலும் திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டத்தின் லால்குடி, திருவெறும்பூர் தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர் டி.என். சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனையில், ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியின் தற்போதைய நிலை, உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைப்பு, வாக்குச்சாவடி வாரியான செயல்பாடுகள், மக்கள் தொடர்பு, எதிர்க்கட்சிகளின் அரசியல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், மாவட்ட நிர்வாகிகளிடம் தொகுதி வாரியான நிலவர அறிக்கைகளையும் எடப்பாடி கே. பழனிசாமி கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில், லால்குடி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது.
அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான லீமா ரோஸ் மார்ட்டின் தலைமையிலான அமைப்புப் பணிகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
திருச்சி மாவட்ட ஆலோசனைக் கூட்டங்களைத் தொடர்ந்து, இன்று மாலை 4.30 மணிக்கு நெல்லை மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி கே. பழனிசாமி தனித்தனி ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார்.
தேர்தல் தோல்விக்கான காரணங்கள், மாவட்ட வாரியான கட்சி மறுசீரமைப்பு, நிர்வாகிகள் செயல்பாடு மற்றும் எதிர்கால தேர்தல் வியூகங்கள் குறித்து இந்தக் கூட்டங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / P YUVARAJ