Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஜூலை (ஹி.ச.)
சென்னை வியாசர்பாடி பகுதியில் உள்ள சாமியார் தோட்டம் பகுதியில் இயங்கி வரும் பழமையான சிவப்பிரகாச சுவாமிகள் மடத்தின் பின்புறத்தில், முகம் முற்றிலும் சிதைக்கப்பட்ட நிலையில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க அந்த ஆணின் உடலை இன்று காலை வழிபாட்டிற்காக மடத்திற்கு வந்த பக்தர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அவர்கள் வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், சடலமாக கிடந்த நபர் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு, அடையாளம் தெரியாமல் இருக்க முகம் சிதைக்கப்பட்டு, பின்னர் மடத்தின் பின்புறம் வீசப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
உயிரிழந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து வியாசர்பாடி போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மடத்தின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும், காணாமல் போனவர்கள் குறித்த புகார்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் புனிதமான மடத்தின் பின்புறத்தில் சடலம் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b