ஊர்க்காவல் படையினர் இன்று முற்றுகைப் போராட்டம் - சென்னை தலைமைச் செயலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
சென்னை, 08 ஜூலை (ஹி.ச.) ஊதிய உயர்வு மற்றும் முறையான பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பணியாற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் இன்று சென்னை தலைமைச் செயலகம் முன்பு திரண்டு போராட்டம் நடத்த உள்ளனர். இதற்காக, ஊர்க்காவல
ஊர்க்காவல் படையினர் இன்று முற்றுகைப் போராட்டம் -  சென்னை தலைமைச் செயலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


சென்னை, 08 ஜூலை (ஹி.ச.)

ஊதிய உயர்வு மற்றும் முறையான பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பணியாற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் இன்று சென்னை தலைமைச் செயலகம் முன்பு திரண்டு போராட்டம் நடத்த உள்ளனர்.

இதற்காக, ஊர்க்காவல் படையைச் சேர்ந்த அனைத்து வீரர்களும் இன்று காலை தலைமைச் செயலகம் முன்பு ஆஜராக வேண்டும் என அப்படையின் சங்க நிர்வாகிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனை ஏற்று, பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் சென்னையில் குவியத் தொடங்கியுள்ளனர்.

காவல்துறைக்கு உறுதுணையாக போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், பாதுகாப்புப் பணி, திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளின்போது பணியாற்றி வரும் தங்களுக்கு, குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்கப்படுவதில்லை என வீரர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தினமும் முறையான பணி வழங்கப்படாமல் பல நாட்கள் வேலையின்றி இருப்பதால் குடும்பத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, தங்களுக்கு நிரந்தர ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், பணி நாட்களை அதிகரிக்க வேண்டும், ஓய்வூதியம் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட நலத்திட்டங்களை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பதே தங்களது முக்கிய கோரிக்கை என போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இக்கோரிக்கைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தகட்டமாக மாநிலம் தழுவிய போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இன்றைய போராட்டத்தையொட்டி தலைமைச் செயலகம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b