விசாகப்பட்டினம் அருகே ஏற்றுமதி மையம் -ஆந்திராவில் மின்சார வாகன உற்பத்தியை விரிவுபடுத்த கியாவுக்கு அழைப்பு
சியோல் , 09 ஜூலை (ஹி.ச.) ஆந்திரப் பிரதேசத்தில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் நோக்கில் தென் கொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மாநில தகவல் தொழில்நுட்பம், கல்வி மற்றும் மின்னணுத் துறை அமைச்சர் நாரா லோகேஷ், சியோலில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின
A


சியோல் , 09 ஜூலை (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேசத்தில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் நோக்கில் தென் கொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மாநில தகவல் தொழில்நுட்பம், கல்வி மற்றும் மின்னணுத் துறை அமைச்சர் நாரா லோகேஷ், சியோலில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாடுகளுக்கான நிர்வாக துணைத் தலைவர் டே ஹன் லீ தலைமையிலான உயர்மட்ட குழுவினரையும், தென் கொரிய அரசின் உயரதிகாரிகளையும் சந்தித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தினார்.

இந்த சந்திப்பின்போது, அனந்தபூரில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் கியா நிறுவனத்தின் தொழிற்சாலை செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்தி, ஆந்திரப் பிரதேசத்தில் ஒருங்கிணைந்த மின்சார (EV) மற்றும் ஹைபிரிட் வாகன உற்பத்தி மையத்தை அமைக்குமாறு அமைச்சர் லோகேஷ் அழைப்பு விடுத்தார்.

மேலும், கியா நிறுவனம் உருவாக்கி வரும் பிளாட்பார்ம் பியாண்ட் வெகிகிள் (PBV) வகை வாகனங்களின் உற்பத்தியையும் ஆந்திராவில் தொடங்குமாறு கேட்டுக்கொண்டார்.

சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதியை எளிதாக்கும் வகையில், விசாகப்பட்டினம் துறைமுகம் அருகே முழுமையாக பிரிக்கப்பட்ட உதிரிபாகங்களை (CKD) ஒன்றிணைக்கும் அசெம்பிளி மற்றும் ஏற்றுமதி மையத்தை அமைக்கவும் அவர் வலியுறுத்தினார்.

அதேபோல், மின்சார வாகனங்களுக்குத் தேவையான உதிரிபாகங்கள், பேட்டரி அமைப்புகள், சார்ஜிங் மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் மின்சார வாகன பவர்டிரெயின் சோதனை மையத்தையும் ஆந்திராவில் நிறுவுமாறு கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த டே ஹன் லீ, இந்த புதிய முதலீட்டு முன்மொழிவுகள் குறித்து நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகத்துடன் ஆலோசித்து, விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், 2017-ஆம் ஆண்டு அனந்தபூரில் கியா தனது தொழிற்சாலையைத் தொடங்கி, 2019-ஆம் ஆண்டு முழு அளவிலான உற்பத்தியை ஆரம்பித்ததை நினைவுகூர்ந்த அவர், தற்போது மின்சார வாகனங்கள் மற்றும் தானியங்கி இயக்கத் தொழில்நுட்பத்தில் நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, தென் கொரிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் யுய்-ஹே சிசிலியா சுங்கை சந்தித்த அமைச்சர் லோகேஷ், ஆந்திர அரசு செயல்படுத்தி வரும் 3S (வேகம், நிலைத்தன்மை, சேவை) கொள்கை கொரிய முதலீட்டாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை அளிக்கும் என்று தெரிவித்தார்.

உலகளாவிய புவிசார் அரசியல் சூழ்நிலையில் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஆந்திரப் பிரதேசம் பாதுகாப்பான மற்றும் நம்பகமான முதலீட்டு மையமாக உருவெடுத்துள்ளதாகவும், தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள், குறைந்த விலையில் நிலம் மற்றும் பல்வேறு ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கினார்.

மேலும், கொரிய நிறுவனங்களில் பணியாற்றும் வகையில் ஆந்திர இளைஞர்களுக்கு மொழி, தொழில்நுட்பம் மற்றும் பண்பாட்டு பயிற்சிகளை வழங்க தென் கொரியாவுடன் இணைந்து கூட்டு பயிற்சி அகாடமிகளை அமைக்க மாநில அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார உறவை வலுப்படுத்தும் நோக்கில் ஆந்திராவில் கொரிய கலாச்சார மையம் அமைப்பதற்கும், ஆந்திரப் பிரதேச–கொரியா முதலீட்டு மேசை உருவாக்குவதற்கும், விசாகப்பட்டினம்–புசான் மற்றும் இன்சியான் நகரங்களுக்கு இடையிலான வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், ஆந்திரப் பல்கலைக்கழகங்களில் கொரிய மொழி மையங்களைத் தொடங்குவதற்கும், இரு பகுதிகளுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை ஏற்படுத்துவதற்கும் அமைச்சர் லோகேஷ் முன்மொழிவு வைத்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA