Enter your Email Address to subscribe to our newsletters

அயோத்தி , 09 ஜூலை (ஹி.ச.)
அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் வழங்கிய காணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த 8 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் அவினாஷ் சுக்லா, அனுகல்ப் மிஸ்ரா, லவகுஷ் மிஸ்ரா, மணீஷ் குமார் யாதவ், கருணேஷ் பாண்டே, ராம்சங்கர் மிஸ்ரா, சுபாஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் டின்னு என்ற ராம்சங்கர் யாதவ் ஆகியோர் அடங்குவர்.
சிறப்பு புலனாய்வுக் குழுவின் முதற்கட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை அறிக்கையின்படி, முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள அவினாஷ் சுக்லா, 40 நாட்களில் 70 முறை காணிக்கைப் பணத்தை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காணிக்கை எண்ணும் பணியின்போது அதிக மதிப்புள்ள பணக்கட்டுகள் மற்றும் ரூபாய் நோட்டுகளை மறைத்து எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான கண்காணிப்பு கேமரா பதிவுகள், அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அவருக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.20.39 லட்சம் ரொக்கம், 1,121 அமெரிக்க டாலர்கள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், சொகுசு கார் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
காணிக்கை எண்ணும் பணிக்காக மாதம் ரூ.15 ஆயிரம் மட்டுமே சம்பளம் பெற்று வந்த நிலையில், அவரது சொத்துகள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், ராமராஜ்ய நிதி என்ற வாசகம் பொறிக்கப்பட்டு, கியூ.ஆர். குறியீடு ஒட்டப்பட்டிருந்த காணிக்கைப் பெட்டி ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
திருடப்பட்ட காணிக்கைப் பணத்தை மறைப்பதற்கும் வெளியே கொண்டு செல்வதற்கும் மற்ற சில பணியாளர்களும் உதவியதாக கண்காணிப்பு கேமரா பதிவுகளில் தெரியவந்துள்ளதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
மொத்தம் 6 பேர் நேரடியாக இந்த முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், இந்த வழக்கில் மேலும் பல கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA