கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது - நயினார் நாகேந்திரன்
நெல்லை, 09 ஜூலை (ஹி.ச.) திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கியிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றார். அதே நேரத்
நயினார் நாகேந்திரன்


நெல்லை, 09 ஜூலை (ஹி.ச.)

திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கியிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றார்.

அதே நேரத்தில், கரூர் சம்பவம் நடந்த அன்றே விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறியிருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும் என்றும், தற்போது வேலை வழங்குவது அரசியல் ரீதியான நடவடிக்கையாகத் தெரிகிறது என்றும் விமர்சித்தார்.

INDI கூட்டணி தற்போது இல்லை என்றும், வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவார் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்றும் கூறினார். மேலும், காங்கிரஸ் நாட்டுக்கு துரோகம் செய்த கட்சி என்றும் குற்றம்சாட்டினார்.

மீனவர் பிரச்சினைக்கு கச்சத்தீவு ஒப்பந்தமே காரணம் என்றும், கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்தோ அல்லது கடிதம் எழுதியோ மேகதாது அணை விவகாரத்தை துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தடுத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

விஜய் தலைமையிலான அமைச்சரவையில் உள்ள காங்கிரஸ் அமைச்சரொருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் தற்போது INDI கூட்டணியில் இல்லை என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அங்கொரு கால், இங்கொரு கால் வைத்திருப்பது போன்ற நிலைப்பாட்டில் உள்ளார் என்றும் விமர்சித்தார். பாலுக்கும் காவல், பூனைக்கும் காவல் என்பது போன்ற கருத்தையே திருமாவளவன் முன்வைக்கிறார் என்றும் கூறினார்.

பள்ளி ஆய்வின்போது அமைச்சர் கீர்த்தனா குழந்தைகளிடம் நடந்துகொண்ட விதம் சரியல்ல என்றும், மூன்று கேமராக்களுடன் சென்று குழந்தைகளிடம் பேசினால் அவர்கள் இயல்பாகவே பயப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

தவெக ஆட்சியின் 59 நாட்களில் 109 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதாகக் கூறிய அவர், ஒரு நாளுக்கு மூன்று பாலியல் வன்கொடுமைகள், இரண்டு நாளுக்கு மூன்று கொலைகள் நடைபெறுகின்றன என்றும் குற்றம்சாட்டினார். ஆட்சியை குறை சொல்லவில்லை என்றாலும், அவற்றைத் தடுக்க அரசு ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

அமைச்சர்களும் முதல்வரும் பதவியேற்கும்போது அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி உறுதிமொழி ஏற்று பொறுப்பேற்கின்றனர் என்றும், ஆனால் விஜயின் நண்பர்களான ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் அமைச்சரவை கூட்டங்களில் பங்கேற்பது அரசியல் அமைப்புச் சட்ட விதிகளுக்கு எதிரானது என்றும் அவர் கூறினார்.

தற்போது நடைபெறுவது போன்ற மோசமான அரசியல் இதுவரை தமிழகத்தில் நடந்ததில்லை என்றும், புஸ்சி ஆனந்த் குதிரைப் பேரத்தில் பிசியாக உள்ளார் என்றும் விமர்சித்தார்.

மேலும், நீர்வளத் துறையை அமைச்சர் முறையாக கவனிக்கவில்லை என்றும், காவிரி நீர் பிரச்சினை குறித்து கவலைப்படாமல் குதிரைப் பேரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் குற்றம்சாட்டினார். தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்களை இலக்காகக் கொண்டு குதிரைப் பேரம் நடைபெற்று வருவதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam