மதுரை மாநகராட்சி ஊழல் புகார்களை விசாரிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
மதுரை, 09 ஜூலை (ஹி.ச) மதுரை மாநகராட்சியில் நடைபெற்றுள்ள வரி வசூல் முறைகேடு மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் புகார்களை உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடை
மதுரை மாநகராட்சி ஊழல் புகார்களை விசாரிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்


மதுரை, 09 ஜூலை (ஹி.ச)

மதுரை மாநகராட்சியில் நடைபெற்றுள்ள வரி வசூல் முறைகேடு மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் புகார்களை உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை திருவள்ளுவர் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள், மாநகராட்சி நிர்வாகத்தில் வரி வசூல் செய்வதில் பெருமளவு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.

மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனக் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், இந்த முறைகேடுகள் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் எனவும், தவறு செய்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சு. வெங்கடேசன் எம்.பி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

மதுரை மாநகராட்சி, தூய்மை பணியை இரண்டு ஆண்டுகளாக அவர் லேண்ட் என்ற தனியார் நிறுவனத்திற்கு ஏற்கனவே கொடுத்திருக்கிறார்கள். அந்த தனியார் நிறுவனம் தொடர்ந்து தூய்மை பணியில் பெரும் மோசடி செய்து வருகின்றது.

ஒவ்வொரு நாளும் 914 டன் குப்பையை அகற்ற வேண்டும். மாநகராட்சியின் தெருக்களில் உள்ள குப்பைகளை அள்ளி வெள்ளைக்கல் பகுதியில் கொண்டு போய் கொட்டுவதற்கு பதிலாக பக்கத்தில் இருக்கிற மண்ணை அள்ளி வெள்ளை கல்லிலேயே போய் கொட்டி குப்பையை கொட்டியதாக கணக்கு சொல்லுகிற வேலையை தொடர்ந்து செய்து வருகிறது.

இதை நாங்கள் பலமுறை கண்டித்து இருக்கின்றோம். மார்க்சிஸ்ட் கட்சி கண்டித்து இருக்கிறது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. தொழிற்சங்க இயக்கங்கள் சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்க இயக்கங்களும் கண்டித்து இருக்கின்றன.

இந்த பின்னணியில் தான் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு மாதத்தில் சுமார் 1000 டன் மண்ணை அள்ளி கொட்டி மோசடி செய்ததாக மாநகராட்சி அதிகாரிகளே. இந்த நிர்வாகத்தின் மீது புகார் அளித்திருக்கிறார்கள்.

ஆனாலும் இந்த நிறுவனத்தின் உரிமை ரத்து செய்யப்படவில்லை. சித்திரை திருவிழாவை பயன்படுத்தி ஏற்கனவே எங்கள் நிறுவனத்தின் மீது போடப்பட்ட அபராதத்தை நீக்கினால் தான் நாங்கள் தூய்மை பணியாற்றுவோம் என்று நிர்வாகத்தை பிளாக்மெயில் செய்கிற வேலையை அந்த நிறுவனம் செய்தது.

பல லட்சம் பக்தர்கள் வந்து செல்கிற சித்திரை திருவிழாவில் ஏற்படுகிற குப்பைகளை நாங்கள் அள்ள மாட்டோம் எங்கள் மீதான அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சொன்னது. ஆனாலும் நிர்வாகம் உறுதியாக இருந்து அவர்களுக்கான அபராதத்தை ரத்து செய்யவில்லை.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு குப்பைகளை அகற்றுவதற்கு பதில் மீண்டும் மண்ணை போட்டு குப்பை அள்ளுவதாக கணக்கு காட்டினார்கள்.

அப்படி மண்ணை அள்ளுகிற லாரியை கையில் தனமாக பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்து இருக்கிறோம். அதன்பிறகு கடந்த 2 வாரங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டம், எனது தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டம் ஆகியவற்றில் இந்த நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி இருக்கிறோம்.

இப்பொழுது வரை இந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே உங்கள் துறையின் கீழ் உங்களின் பொறுப்பின் கீழ் வருகிற இந்த துறையில் தனியார் மையத்தின் உடைய ஒரு குறிப்பிட்ட நிறுவனம் மிகப்பெரிய மோசடியை செய்கிறது.

இது மூன்று வகையில் இழப்பை ஏற்படுத்துகிறது. ஒன்று மதுரை மக்களுடைய சுகாதாரம் பெரும் கேள்வி குறியாய் இருக்கிறது. இரண்டு அரசாங்கத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டத்தை உருவாக்குகிறது. மூன்று குப்பை அள்ளுவதற்கு பதில் மண்ணை அள்ளிக் கொண்டு போய் கொட்டி கணக்கு காட்டுகிற வேலையை தொடர்ந்து செய்து வருகிறது.

ஆனால் அந்த நிறுவனத்தின் மீது எந்த நடவடிக்கையும் இப்பொழுது வரை எடுக்க முடியவில்லை. தொடர்ந்து மாவட்ட ஆய்வுக் கூட்டங்களில் நாங்கள் தெரிவித்து விட்டோம். இந்த நிறுவனத்திற்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதன் காரணத்தால் தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

மாண்புமிகு முதலமைச்சர் ஊழலில் ஈடுபட்ட மாநகராட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எழுத்துப்பூர்வமாக புகார் செய்யப்பட்டுள்ள இந்த நிறுவனத்தினுடைய தூய்மை பணி ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்.

அதேபோல அடுத்து இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் ஏறக்குறைய அனைத்து மாநகராட்சி பேரூராட்சிகளில் தூய்மை பணியை தனியாருக்கு ஏற்கனவே கொடுத்த ஒப்பந்தம் காலாவதியாகிறது. புதிதாக இந்த துறையில் தனியாரை அனுமதிக்க கூடாது. இது தமிழ்நாட்டிலே வாழுகிற ஐந்து கோடி மக்கள் இருக்கிற நகர்ப்புறங்களில் வாழ்வை பெரும் கேள்விக்குறியாக்கும்.

எனவே தூய்மை பணியை தனியாருக்கு கொடுக்கிற ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும். மதுரை மாநகராட்சியில் அவர் லாண்ட் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிற ஒப்பந்தத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் மக்களுக்கு நீங்கள் வழங்குகிற நியதியாக இருக்கும். அந்த நியதியை நீங்கள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் திரளாக கலந்துகொண்டனர்.

Hindusthan Samachar / vidya.b