Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜூலை (ஹி.ச.)
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) பாலவாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 7 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டதாகக் கூறி, பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில், பாலவாக்கம் பகுதியில் நீண்ட நேரம் மின்சாரம் இல்லாததால் முதியவர்கள், நோயாளிகள், சிறு குழந்தைகள் மற்றும் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் பாலவாக்கம் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனர். ஆனால், உரிய பதில் கிடைக்கவில்லை எனக் கூறி குழந்தைகளுடன் அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள், பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பும் ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், மின்தடை ஏற்பட்டபோது தொடர்பு கொள்ள வழங்கப்பட்ட தொலைபேசி எண்களுக்கு பலமுறை அழைத்தும் பதில் கிடைக்கவில்லை என்றும், அதிகாரிகள் பொதுமக்களின் குறைகளை அலட்சியமாக கையாளுவதாகவும் குற்றம்சாட்டினர்.
மேலும், கடந்த 50 நாட்களாக எங்கள் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், கைக்குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினர்.
போராட்டத்தின் போது சிலர் அரசின் செயல்பாடு குறித்து கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தனர். மேலும், அங்கு இருந்ததாகக் கூறப்படும் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த நபரிடமும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியதாகவும், அவர் பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
Hindusthan Samachar / GOKILA arumugam