Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜூலை (ஹி.ச.)
சென்னை புளியந்தோப்பு கே.எம். கார்டன் பகுதியைச் சேர்ந்த அய்யனார் (35), பாரிமுனையில் உள்ள தனியார் பிரிண்டிங் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவருக்கு சூர்யகலா என்ற மனைவியும், ஆகி எஸ்தர் (14), ஏஞ்சல் (13) ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர்.
அய்யனார் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்து, அடிக்கடி குடிபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு வேலை முடிந்து வழக்கம்போல் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த அவர், மனைவியுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த சூர்யகலா, இரவு உணவு வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஆத்திரமடைந்த அய்யனார், தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக தெரிகிறது.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மகள்களும், அக்கம்பக்கத்தினரும் இணைந்து தீயை அணைத்து அவரை மீட்டு, சென்னை கே.எம்.சி. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சுமார் 40 சதவீத தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் உள்ள அய்யனாருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ