Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாடு மின்வாரியத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் சென்னை ஐஐடி இடையே முதல்முறையாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மின்வாரிய நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத் திட்டம் என்ற பெயரில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மின் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
நிகழ்ச்சியில் பேசிய ஐஐடி இயக்குநர் காமகோடி, எரிசக்தி வளங்களை திறம்பட நிர்வகிப்பதன் மூலம் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற முடியும் என்றும், சென்னை ஐஐடியும் தமிழக அரசும் இணைந்து 'Smart, Secure, Reliable' மின் அமைப்பை உருவாக்க உள்ளதாக தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் மின் வளங்களை திறம்பட நிர்வகிப்பதுடன், இணையவழி தாக்குதல்களைத் தடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அடுத்த சில மாதங்களில் இந்தத் திட்டத்தில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் இணைக்கப்படும் என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், மின் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மின் உற்பத்தி முதல் விநியோகம் வரை அனைத்து செயல்பாடுகளையும் மேம்படுத்த ஐஐடி நிபுணர்களின் ஆலோசனைகள் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். இதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மின் தடை மற்றும் மின் தட்டுப்பாட்டை தீர்க்க டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், தொழில்நுட்ப ஆய்வுக்குப் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், மின் துறையில் நிலவும் ஆட்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில், இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி மூலம் 15 ஆயிரம் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்றும், அவர்கள் பணியில் சேரும் வரை அடுத்த 6 முதல் 7 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ