முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம் - முன்னேற்பாடுகள் தீவிரம்
சென்னை, 09 ஜூலை (ஹி.ச.) தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் நாளை கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவர் கரூருக்கு செல்வது இதுவ
முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம் - முன்னேற்பாடுகள் தீவிரம்


சென்னை, 09 ஜூலை (ஹி.ச.)

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் நாளை கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவர் கரூருக்கு செல்வது இதுவே முதல்முறையாகும்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

முதலமைச்சர் விஜய் கலந்துகொண்ட அந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.

இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதிக்கு வரவழைத்து விஜய் நேரில் ஆறுதல் கூறியிருந்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தலா 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

அப்போது பேசிய விஜய், தேர்தல் பணிகள் முடிந்ததும் கரூருக்கு நேரடியாக வந்து பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பேன் என உறுதியளித்திருந்தார்.

அந்த வாக்குறுதியின்படி, கூட்ட நெரிசல் சம்பவம் நடந்து 9 மாதங்கள் கடந்துள்ள நிலையில், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக நாளை அவர் கரூர் செல்கிறார்.

இந்தப் பயணத்தின்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், படுகாயமடைந்தவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதுடன், அவர்களின் தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிய உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாளை காலை 9:30 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்றடையும் முதல்வர் விஜய், அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாகக் கரூர் மாவட்டத்திற்குச் செல்கிறார்.

கரூர் மாவட்டம் மனவாசி ஊராட்சியில் ரூ.1,700 கோடி மதிப்பில் அமையவுள்ள 'எவர்கிரீன் கோதாரி'

(Evervan Kothari) என்ற தோல் அல்லாத காலணி தயாரிக்கும் புதிய தனியார் தொழிற்சாலைக்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். இதன் மூலம் சுமார் 13,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, பயனாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

தொடர்ந்து, வெண்ணெய்மலையில் உள்ள, தனியாருக்கு சொந்தமான, 'அட்லஸ்' கலையரங்க வளாகத்தில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

இதில், கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 32 பேருக்கு, கருணை அடிப்படையில் அரசு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் நாளை வழங்க உள்ளார்.

முதல்வர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 5,000 பேர் அமரும் வகையில், பிரமாண்ட கூடாரம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முன்கூட்டியே அனுமதி பெற்ற 5,000 பேருக்கு க்யூஆர் கோடு (QR Code) கொண்ட பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன

நாளை தமிழக முதல்வர் விஜய் கரூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருவதையொட்டி, பிரமாண்ட பேனர்கள் ஆங்காங்கு வைக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் இந்த வருகையை முன்னிட்டு கரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் (ADGP) டி.எஸ். அன்பு தலைமையில் சுமார் 6,700 போலீஸார் கரூர் மற்றும் திருச்சி எல்லைகளில் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b