Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜூலை (ஹி.ச)
சமீப காலமாக சன் ரூஃப் கொண்ட கார்களில் குழந்தைகளை மேலே எழுந்து நிற்க வைத்து பயணிப்பது அதிகரித்து வருகிறது.
இது வேடிக்கையாக தோன்றினாலும், திடீர் பிரேக், வேகத்தடை அல்லது விபத்து ஏற்படும் போது குழந்தைகள் தூக்கி வீசப்பட்டு படுகாயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும், சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளின் கவனத்தையும் இது திசை திருப்புகிறது.
மோட்டார் வாகன சட்டத்தின்படி, ஓடும் வாகனத்தில் இருந்து உடலை வெளியே நீட்டுவது மற்றும் பயணிகளின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இதனை கருத்தில் கொண்டு சென்னை போக்குவரத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
விதிமீறலில் ஈடுபடுவோருக்கு முதற்கட்டமாக ரூ.1000 அபராதம் விதிக்கப்படுவதுடன், தொடர்ந்து மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த வகையில் சென்னையில் காரின் சன் ரூஃப் வழியாக குழந்தைகளை வெளியே நிற்க வைத்து ஆபத்தான முறையில் பயணம் செய்வோர் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சாலை பாதுகாப்பு விதிகளை மீறி, குழந்தையின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டிச் சென்ற ஒருவருக்கு போக்குவரத்து போலீசார் ரூ.1000 அபராதம் விதித்துள்ளனர்.
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, பயணத்தின் போது அவர்களை சீட் பெல்ட் அணிவித்து, குழந்தைகளுக்கான பிரத்யேக இருக்கையில் அமர வைக்க வேண்டும் எனவும், சன் ரூஃபை வேடிக்கைக்காக திறந்து வைத்து பயணிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் காவல்துறையினர் பெற்றோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b