Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜூலை (ஹி.ச.)
சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ, நகராட்சி ஆணையரின் இருக்கையில் அமர்ந்து கோப்புகளை பார்வையிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் செயல் நிர்வாக மரபுகளை மீறியதாகவும், அரசு அதிகாரியின் பணியில் தலையிடும் வகையில் இருந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும், ஆய்வின்போது நகராட்சி ஆணையரை அச்சுறுத்தும் தொனியில் பேசியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பின்னணியில், திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தவெக எம்.எல்.ஏ-வுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில், அரசு அலுவலகத்தில் அதிகாரியின் இருக்கையில் அமர்ந்து ஆய்வு செய்தது ஏன் என்பது குறித்தும், ஆணையரை மிரட்டியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்தும் உரிய விளக்கம் அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து பகிரங்க மன்னிப்பு கோராத பட்சத்தில், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் அந்த நோட்டீஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் சிவகங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் ஏதும் வெளியாகவில்லை.
Hindusthan Samachar / vidya.b