Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 09 ஜூலை (ஹி.ச.)
வேலூர் மாவட்டம் காட்பாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக யானை தந்தங்களை கடத்தி வந்து விற்பனை செய்ய முயற்சி நடைபெறுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காட்பாடி வனச்சரக அலுவலர்கள் அந்த பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில், காட்பாடி அருகே அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (53) என்பவரின் மாந்தோப்பில் இரண்டு யானை தந்தங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வனத்துறையினர் இரண்டு யானை தந்தங்களையும், அவற்றை கடத்த பயன்படுத்தியதாக கூறப்படும் இரண்டு இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், யானை தந்தங்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததாக ஜெயக்குமார் மற்றும் கே.வி.குப்பம் அருகே தேவிகாபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய இருவரை கைது செய்து காட்பாடி வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், யானை தந்தங்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், இந்த கடத்தல் மற்றும் விற்பனைச் சங்கிலியின் முக்கிய குற்றவாளியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முருகேஷ் என்பவர் இருப்பதும், அவர் பரதராமி கெங்கையம்மன் கோயில் அருகே பதுங்கியிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து குடியாத்தம் வனத்துறையினர் இன்று அதிகாலை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, முருகேஷை சுற்றி வளைத்து கைது செய்து, அவரிடமிருந்த இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட முருகேஷை விசாரணைக்காக காட்பாடி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஜெயக்குமார், சீனிவாசன் மற்றும் முருகேஷ் ஆகிய மூவரிடமும் காட்பாடி வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். யானை தந்தங்கள் எவ்வாறு கிடைத்தது? கடத்தல் கும்பலில் மேலும் யார் யார் தொடர்புடையவர்கள்? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / ANANDHAN