Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜூலை (ஹி.ச.)
தமிழகத்தில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5,000 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட சாலைப் பணிகளில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி எ.வ.வேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
மேலும், சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த நிலையில், அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்யக் கோரியும் தனி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தன.
எ.வ.வேலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சித்தார்த் லுத்ரா மற்றும் பி. வில்சன் ஆகியோர், ஊழல் தடுப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட சமீபத்திய திருத்தத்தின்படி, அரசின் முன் அனுமதி பெறாமல் வழக்குப்பதிவு செய்ய முடியாது என்றும், 2022-ல் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிட்டனர்.
மேலும், சாலைப் பணிகளுக்கான முன்பணம் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும், அரசுக்கு எந்த நிதி இழப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனைக்கு முழுமையாக ஒத்துழைத்திருந்த நிலையில், மருத்துவப் பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தபோதே லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதாகவும், ஜூலை 12-ஆம் தேதி இந்தியா திரும்ப இருப்பதாகவும் தெரிவித்தனர்.
கைது தவிர்க்கும் நோக்கம் இருப்பதற்கான நம்பத்தகுந்த காரணங்கள் இருந்தால் மட்டுமே லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க முடியும் என்றும் வாதிட்டனர்.
இதற்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், சாலைப் பணிகள் நிறைவடையாத நிலையில், தரச் சான்றிதழ்கள் பெறாமல் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஒரு ஒப்பந்ததாரருக்கு மட்டும் 85 பணிகளுக்காக ரூ.195 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், வழக்கு தொடர அனுமதி வழங்க வேண்டிய அதிகாரி யார் என்பது குறித்த விவகாரமும் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறினார்.
இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு ஜூலை 27-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டார்.
அதுவரை எ.வ.வேலுவுக்கு எதிராக எந்தவித கடுமையான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், லுக் அவுட் நோட்டீசை எதிர்த்த மனுவில், ஜூலை 15-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன், எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P