ஆலங்குளம் நெல் மூட்டைகள் தீ விபத்து,முழுமையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு, 09 ஜூலை (ஹி.ச.) தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தற்காலிக நெல் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தி, பொறுப்புக்கூற வேண்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க
இபிஎஸ்


தமிழ்நாடு, 09 ஜூலை (ஹி.ச.)

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தற்காலிக நெல் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தி, பொறுப்புக்கூற வேண்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில்,

ஆலங்குளத்தில் உள்ள நிரந்தர உணவு சேமிப்பு கிடங்கில் போதிய இடவசதி இல்லாததால், வெங்கடாம்பட்டி மற்றும் ஐந்தாங்கட்டளை ஊராட்சிகளுக்குட்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சுமார் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் தீ விபத்தில் கருகி வீணாகியதாக செய்திகள் வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் புரியவில்லை என்றும், பல நாட்களாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரிசி ஆலைகளுக்கு அரவைக்கு அனுப்பாமல் அதிகாரிகள் தேக்கி வைத்ததால் அவை பாழடைந்ததாக சில விவசாயிகள் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அதிகாரிகள் தங்களது தவறுகளை மறைப்பதற்காக செயற்கையாக தீ விபத்தை ஏற்படுத்தியிருக்கலாமோ என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக கூறியுள்ள அவர், இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதும் மீண்டும் நடைபெறாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam