மாந்தோப்பில் பணம் வைத்து சூதாட்டம் - திருவள்ளூரில் 9 பேர் கைது, ரூ.16.89 லட்சம் பறிமுதல்
திருவள்ளூர், 09 ஜூலை (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள மாந்தோப்பு ஒன்றில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆரம்பாக்கம் காவல் நிலைய போலீசார் நேற்று இரவு அப்பகுதியில் திடீ
Gambling for money in a mango grove


திருவள்ளூர், 09 ஜூலை (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள மாந்தோப்பு ஒன்றில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆரம்பாக்கம் காவல் நிலைய போலீசார் நேற்று இரவு அப்பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது மாந்தோப்பில் கும்பலாக அமர்ந்து பெருந்தொகை பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த ஒன்பது பேரை சுற்றிவளைத்து பிடித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, அவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட ரூ.16 லட்சத்து 89 ஆயிரம் ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் சம்பவ இடத்தில் இருந்த சீட்டுக்கட்டுகள் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

கைதான ஒன்பது பேர் மீதும் சூதாட்ட தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் ஆரம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற சட்டவிரோத சூதாட்டங்களை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் பண்ணை வீடுகள் மற்றும் மாந்தோப்புகளை வாடகைக்கு எடுத்து இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் எனத் தமிழ்நாடு காவல் துறை எச்சரித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b