Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முந்தைய ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட சில அரசுத் திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டமாக செயல்பட்டு வந்த 'மகளிர் விடியல் பயணம்' திட்டத்தின் பெயர் தற்போது 'மகளிர் பயணம்' என மாற்றப்பட்டுள்ளது.
முன்னதாக, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட 'நான் முதல்வன்' திட்டம் 'திறன் தமிழ்நாடு' என்றும், 'முதல்வர் படைப்பகம்' திட்டம் 'படைப்பகம்' என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
கடந்த ஆட்சியில் அரசு சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசப் பயணத் திட்டத்திற்கு 'மகளிர் விடியல் பயணம்' எனப் பெயரிடப்பட்டு, பேருந்துகளின் முன்புறம் மற்றும் பின்புற மின்னணு காட்சிப்பலகைகளிலும் அந்தப் பெயர் இடம்பெற்றிருந்தது.
தற்போது அந்தத் திட்டத்தின் பெயரில் இருந்த 'விடியல்' என்ற வார்த்தை நீக்கப்பட்டு, 'மகளிர் பயணம்' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து மண்டலங்களிலும் பேருந்துகளின் காட்சிப்பலகைகளில் பெயர் மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டத்திலும் அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' என்பதற்குப் பதிலாக 'மகளிர் பயணம்' என்ற புதிய பெயர் இடம்பெற்றுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P