முதல்வர் விஜய் தலைமையில் தொழில்துறை ஆலோசனைக் கூட்டம் - பரந்தூர் திட்டம் குறித்து முக்கிய முடிவுகள் எதிர்பார்ப்பு
சென்னை, 09 ஜூலை (ஹி.ச.) சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தொழில்துறை உயர் அதிகாரிகளுடனான முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் தொழில் முதலீடுகளை விரைவுபடுத்துவது மற்றும் நிலுவையில் உள்
விஜய் தலைமையில் தொழில்துறை ஆலோசனைக் கூட்டம் - பரந்தூர் திட்டம் குறித்து முக்கிய முடிவுகள் எதிர்பார்ப்பு


சென்னை, 09 ஜூலை (ஹி.ச.)

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தொழில்துறை உயர் அதிகாரிகளுடனான முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை விரைவுபடுத்துவது மற்றும் நிலுவையில் உள்ள திட்டங்களுக்குத் தீர்வு காண்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ள புதிய பன்னாட்டு விமான நிலையத் திட்டம் தொடர்பான நிலம் கையகப்படுத்துதல், பாதிக்கப்படும் மக்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி அமைக்கப்படவுள்ள தொழில் பூங்காக்கள் குறித்து முதல்வர் விஜய் இன்று அதிகாரிகளிடம் நேரடியாக விளக்கம் கேட்க உள்ளார். இத்திட்டம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு இன்றைய கூட்டத்தில் தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, தொடங்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்த ஆய்வு மற்றும் தொழில் தொடங்குவதில் உள்ள நடைமுறைத் தடைகளை நீக்குவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. ஒற்றைச் சாளர முறையில் அனுமதிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக முதல்வர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தை தொழில் துறையில் முன்னணி மாநிலமாக மாற்றும் நோக்கில் இன்றைய ஆலோசனைக் கூட்டம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இக்கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் துறை சார்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b