அமெரிக்கா தாக்கினால் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவோம் - ஈரான் கடும் எச்சரிக்கை
ஈரான், 09 ஜூலை (ஹி.ச.) அமெரிக்கா தனது படைத்தாக்குதலை தொடர்ந்தால் உலகின் மிக முக்கியமான எண்ணெய் கப்பல் பாதையான ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவோம் என ஈரான் மீண்டும் எச்சரித்துள்ளது. டெஹ்ரானின் மத்திய ராணுவ தலைமையகம் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர
அமெரிக்கா தாக்கினால் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவோம் - ஈரான் கடும் எச்சரிக்கை


ஈரான், 09 ஜூலை (ஹி.ச.)

அமெரிக்கா தனது படைத்தாக்குதலை தொடர்ந்தால் உலகின் மிக முக்கியமான எண்ணெய் கப்பல் பாதையான ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவோம் என ஈரான் மீண்டும் எச்சரித்துள்ளது.

டெஹ்ரானின் மத்திய ராணுவ தலைமையகம் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் அதிகாரிகள், நீரிணையை கடக்க முயலும் எந்தக் கப்பலும் தாக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

கடந்த வாரம் அமெரிக்கா ஈரானின் கடலோர இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு, ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தது. இதற்கு பதிலாக, அமெரிக்கா ஒரு இலக்கைத் தாக்கினால், நாங்கள் இரண்டு இலக்குகளைத் தாக்குவோம் என டெஹ்ரான் சூளுரைத்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நீரிணையை 48 மணி நேரத்தில் திறக்காவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை அழிப்போம் என கடுமையாக எச்சரித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்கா எங்கள் மின் நிலையங்களை தாக்கினால், ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவோம். மேலும் பிராந்தியத்தின் எரிசக்தி மற்றும் நீர் உள்கட்டமைப்புகளையும் குறிவைப்போம் என ஈரான் தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை என்பது பாரசீக வளைகுடாவையும் அரபிக் கடலையும் இணைக்கும் 33 கி.மீ அகலமுள்ள குறுகிய கடல் பாதை. உலகின் தினசரி எண்ணெய் நுகர்வில் சுமார் 20% இந்த வழியாகவே செல்கிறது.

போர் தொடங்கியதிலிருந்து இந்த வழித்தடம் முடக்கப்பட்டுள்ளதாகவும், தினமும் 130-க்கும் மேற்பட்ட கப்பல்கள் சென்ற இடத்தில் தற்போது ஒரு சில கப்பல்கள் மட்டுமே செல்ல துணிவதாகவும் கப்பல் கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த மோதல் மத்திய கிழக்கில் மீண்டும் பெரிய போரை தூண்டும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

எண்ணெய் விலைகள் ஏற்கனவே உயரத் தொடங்கியுள்ளன, மேலும் பிராந்தியத்தில் அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என அச்சம் நிலவுகிறது.

இரு தரப்பும் பின்வாங்காமல் மிரட்டல்களை தொடர்வதால், ஹோர்முஸ் நீரிணை விவகாரம் தற்போது ஈரானின் “தங்க ஆயுதமாக” மாறியுள்ளது என சர்வதேச ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b