ஆட்டோ கட்டணம் உயருமா? - இன்று அமைச்சர் விஜய் பார்த்திபன் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம்
சென்னை, 09 ஜூலை (ஹி.ச.) தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை மறுநிர்ணயம் செய்வது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் பார்த்திபன் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதனால் ஆட்டோ கட்டணம் உயருமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள்
ஆட்டோ கட்டணம் உயருமா?  - இன்று அமைச்சர் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம்


சென்னை, 09 ஜூலை (ஹி.ச.)

தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை மறுநிர்ணயம் செய்வது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் பார்த்திபன் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதனால் ஆட்டோ கட்டணம் உயருமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக எரிபொருள் விலை உயர்வு, உதிரி பாகங்களின் விலை ஏற்றம் மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளதால் ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

இதற்கிடையே, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்டோ கட்டணத்தை மறுஆய்வு செய்து நிர்ணயிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

உயர் நீதிமன்றத்தின் அந்த உத்தரவை செயல்படுத்தும் வகையில், இன்றைய கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய ஆட்டோ தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் குறைந்தபட்ச கட்டணம், கிலோமீட்டருக்கான கட்டணம், காத்திருப்பு கட்டணம் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் ஆட்டோ கட்டண உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

அதே சமயம், நுகர்வோர் அமைப்புகள் தரப்பில் கட்டண உயர்வு பொதுமக்களுக்கு சுமையாக அமையக்கூடாது என வலியுறுத்தப்பட உள்ளது.

எனவே அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்து சமநிலையான முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b