வெள்ளத்தில் வீட்டுக் கதவை ஸ்டிரெச்சராக மாற்றி கர்ப்பிணியை காப்பாற்றிய கிராம மக்கள் - மராட்டியத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
மும்பை, 09 ஜூலை (ஹி.ச.) மராட்டிய மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதுடன், பல இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், பால்
A


மும்பை, 09 ஜூலை (ஹி.ச.)

மராட்டிய மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.

இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதுடன், பல இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

இந்த நிலையில், பால்கர் மாவட்டம் அனுமன்பாதா கிராமத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் மார்பளவு தண்ணீர் தேங்கியது.

அந்த கிராமத்தை சேர்ந்த பிரியங்கா ரவி யாதவ் என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

ஆனால், வீட்டை சுற்றிலும் வெள்ளநீர் சூழ்ந்திருந்ததால் அவரை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் அங்கு வர முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் செய்வதறியாது தவித்த குடும்பத்தினருக்கு உதவ கிராம மக்கள் முன் வந்தனர்.

அவர்கள் வீட்டின் கதவு ஒன்றை கழற்றி எடுத்து, அதனை ஸ்டிரெச்சர் போல் பயன்படுத்தி கர்ப்பிணி பெண்ணை அதில் படுக்க வைத்தனர்.

பின்னர், மார்பளவு சூழ்ந்திருந்த வெள்ள நீரில் அந்த பெண்ணை தூக்கிச் சென்று அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

கிராம மக்களின் இந்த சமயோசிதமான நடவடிக்கையால் கர்ப்பிணி பெண்ணுக்கு உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைத்தது. தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

மழை வெள்ளத்தால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மனிதநேயத்துடன் செயல்பட்டு கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றிய அனுமன்பாதா கிராம மக்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA