Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜூலை (ஹி.ச.)
கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர், தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்க இயலாது என தெரிவித்திருப்பது, உச்சநீதிமன்ற உத்தரவை நேரடியாக அவமதிக்கும் செயலாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில்,
பருவமழை பொய்த்தது என்பது கூட்டாட்சி ஒத்துழைப்பைப் புறக்கணிக்கவோ அல்லது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கவோ காரணமாக இருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தேசியச் சொத்து என்றும், எந்த ஒரு மாநிலமும் அதன் மீது தனி உரிமை கோர முடியாது என்றும் தெளிவாக கூறப்பட்டிருப்பதை கர்நாடக அரசுக்கு நினைவூட்டியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் (CWMA) ஜூன் மாதத்திற்கு 9.91 டிஎம்சியும், ஜூலை மாதத்திற்கு 32 டிஎம்சியும் தமிழகத்திற்கு திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாகவும், வறட்சிக் காலங்களிலும் விகிதாச்சார அடிப்படையில் நீரைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, உச்சநீதிமன்ற உத்தரவையும் காவிரி மேலாண்மை வாரியத்தின் கால அட்டவணையையும் மதித்து, தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு உடனடியாகத் திறந்துவிட வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam