நீட் தேர்வைத் தொடர்ந்து வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கான தகுதித் தேர்விலும் அநீதி – மாணிக்கம் தாகூர்
சென்னை, 09 ஜூலை (ஹி.ச.) நீட் தேர்வைத் தொடர்ந்து, வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கான தகுதித் தேர்விலும் அநீதி நடைபெறுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப. மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து,அவர் வெளியிட்டுள்ள
Manickam


Bb


சென்னை, 09 ஜூலை (ஹி.ச.)

நீட் தேர்வைத் தொடர்ந்து, வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கான தகுதித் தேர்விலும் அநீதி நடைபெறுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப. மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து,அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நுழைவுத் தேர்வு என்ற பெயரில் ஏழை, நடுத்தர குடும்பங்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவர் கனவை பாசிச மோடி அரசு சிதைத்து வருகிறது. எந்தவொரு தேர்வாக இருந்தாலும் அனைத்து தரப்பு மாணவர்களும் எளிதில் அணுகும் வகையில் இருக்க வேண்டும். ஆனால், மோடி ஆட்சியில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மன உளைச்சலையும் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தும் பூதமாக நுழைவுத் தேர்வுகள் மாற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர்களின் திறனை கண்டறிவதற்குப் பதிலாக, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களை கல்வியில் இருந்து வெளியேற்றும் கருவியாக நுழைவுத் தேர்வுகள் பயன்படுத்தப்படுவதாகவும், நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகள் காரணமாக மறுதேர்வு நடத்தும் நிலை ஏற்பட்டதாகவும், இதனால் மாணவர்கள் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்யும் அளவுக்கு சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் மருத்துவம் செய்ய தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (NBEMS) நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் இந்தத் தேர்வில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நீண்ட கேள்விகள், வீடியோ அடிப்படையிலான கேள்விகள் மற்றும் மருத்துவ செயல்முறை தொடர்பான கேள்விகள் அறிமுகப்படுத்தப்பட்டதால், தேர்ச்சி விகிதம் வெறும் 12.78 சதவீதமாக குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 36,280 பேர் தேர்வு எழுதியதில் 4,635 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வீடியோ அடிப்படையிலான கேள்விகள் உள்ளிட்ட முக்கிய மாற்றங்களுக்கு தேர்வர்கள் தயாராக போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை என்றும், தேர்வு நாளிலேயே விதிமுறைகள் மாற்றப்பட்டதாகவும், இது மோடி அரசின் மேட்டுக்குடி, பண்ணையார் மனநிலையை வெளிப்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். கடன் வாங்கி வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்களை மருத்துவப் பணி செய்ய விடாமல் தடுப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, மத்திய சுகாதாரத் துறை உடனடியாக வெளிப்படையான மறுஆய்வை மேற்கொண்டு, இந்தத் தேர்வுக்கான கட்-ஆஃப்

(Cut-off) மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்றும், மோடி அரசால் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவர்களின் உரிமைகளை வென்றெடுக்க காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்றும் ப. மாணிக்கம் தாகூர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ