Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜூலை (ஹி.ச.)
தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் உரிய அங்கீகாரம் மற்றும் பல்கலைக்கழக இணைவு இல்லாமல் செயல்படும் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவையெனில் அவை மூடப்படும் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தரேஸ் அகமது எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அரசாணையில்,
சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களும் மத்திய, மாநில அரசுகள் மற்றும் சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகளின் அங்கீகாரத்துடன் மட்டுமே இயங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் கல்வி நிறுவனங்களால் மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படுவதால், இதுபோன்ற நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனுமதி பெறாத கல்வி நிறுவனங்கள் அல்லது அங்கீகாரம் இல்லாத பாடப்பிரிவுகள் நடத்தப்படுவதாக புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சமீபகாலமாக மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர் படிப்பு, மருந்தியல், துணை மருத்துவப் படிப்புகள், இயன்முறை மருத்துவம், ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை உரிய அனுமதியின்றி சில நிறுவனங்கள் நடத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. சில நிறுவனங்கள் பொதுவான அனுமதி பெற்றிருந்தாலும், குறிப்பிட்ட பாடப்பிரிவுகளை அங்கீகாரம் இன்றி நடத்தி வருவதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற போலி கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்து சேர்க்கை நடத்துவதால், அவர்களின் எதிர்காலம் மட்டுமின்றி பொதுமக்களின் சுகாதார பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதாக மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.
இதனைத் தடுக்க புதிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மாவட்ட அளவிலான முதன்மை அதிகாரியாக செயல்பட்டு, மாவட்ட ஆட்சியர், காவல்துறை மற்றும் மருத்துவப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்வார்.
அங்கீகாரமற்ற நிறுவனங்கள் குறித்து புகார்கள் வந்தால், நிபுணர்கள் அடங்கிய ஆய்வுக்குழு அமைத்து, நிறுவனத்தின் உள்கட்டமைப்பு, மருத்துவ வசதிகள், மாணவர் சேர்க்கை, கட்டண விவரங்கள் மற்றும் பல்கலைக்கழக அங்கீகாரம் உள்ளிட்ட அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
ஆய்வில் விதிமீறல்கள் உறுதியானால், பாரதிய நியாய சன்ஹிதா (BNS), 2023 சட்டத்தின் கீழ் ஏமாற்றுதல், மோசடி, பொதுமக்களுக்கு ஆபத்து விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாணவர் சேர்க்கை தடை செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் சட்டப்படி மூடப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மற்றும் படிப்புகளின் பட்டியல் ஆண்டுதோறும் ஏப்ரல் 1-ஆம் தேதி சம்பந்தப்பட்ட இயக்ககங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்படும் என்றும், அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களும் தங்களது அங்கீகார விவரங்கள் மற்றும் பல்கலைக்கழக இணைவு சான்றுகளை வளாகத்திலும், இணையதளத்திலும் கட்டாயம் வெளியிட வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ