Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 09 ஜூலை (ஹி.ச)
கடந்த 2022-ஆம் ஆண்டு புதுச்சேரி லாஸ்பேட்டையில் வசிக்கும் தனது அண்ணன் மரிய கிளோத் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரது மனைவி கேர்லின் கிளாடின் மற்றும் குடும்பத்தினரைத் தாக்கியதாக தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததை அடுத்து, பலத்த பிரிவுகளின் கீழ் கூடுதல் விசாரணை நடத்தி புதிய குற்றப்பத்திரிகையை புதுச்சேரி போலீஸார் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையைப் பெற்றுக் கொள்ள கடந்த ஜூலை 4-ஆம் தேதி அமைச்சர் நேரில் ஆஜராக வேண்டும் என்று புதுச்சேரி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், தமிழக பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் மற்றும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரைக் காரணம் காட்டி அமைச்சர் ஆஜராகவில்லை.
இதனால் அதிருப்தியடைந்த நீதிபதி, மீண்டும் மீண்டும் ஒரே காரணத்தைக் கூறி காலதாமதம் செய்ய முடியாது என்று எச்சரித்து, ஜூலை 10-ஆம் தேதி (நாளை) கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
புதுச்சேரி நீதிமன்றம் நேரில் ஆஜராகக் கெடு விதித்துள்ள நிலையில், இந்தத் தாக்குதல் வழக்கையும், கூடுதல் குற்றப்பத்திரிகையையும் முழுமையாக ரத்து செய்யக்கோரி அமைச்சர் மரிய வில்சன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாகத் தன் மீது திட்டமிட்டுப் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக அவரது தரப்பு வாதமாக முன்வைக்கப்படுகிறது.
இதேபோன்று ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சருக்கு அண்மையில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த மனு இன்று அல்லது நாளை விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.
Hindusthan Samachar / vidya.b