Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 09 ஜூலை (ஹி.ச.)
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை தமிழக அரசு தாமதப்படுத்தாமல், மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு அனுமதி பெற்ற பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு, ஓடுதளம் அமைக்க முடியாது என்று தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது என்றும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலானது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய விமான நிலைய ஆணையம் (AAI), பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட அமைப்புகள் நீர்நிலைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த பின்னரே திட்டத்திற்கு கொள்கை அளவிலான அனுமதி வழங்கியுள்ளன என்றும், தொழில்நுட்ப நிபுணர்கள் தேவையான பொறியியல் தீர்வுகளையும் பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சென்னை விமான நிலையத்தை இடநெருக்கடி காரணமாக மேலும் விரிவுபடுத்த முடியாத சூழலில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை தாமதப்படுத்துவது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை பாதிக்கும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
எனவே, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை காலதாமதமின்றி செயல்படுத்த தமிழக அரசு மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ