நஞ்சை புகலூர் புதிய கதவணைப் பணிகளை அமைச்சர்கள் ஆய்வு
கரூர், 09 ஜூலை (ஹி.ச) கரூர் மாவட்டம் நஞ்சை புகலூர் மற்றும் நாமக்கல் மாவட்டம் அனிச்சம்பாளையம் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய கதவணைப் பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி
ஆய்வு


கரூர், 09 ஜூலை (ஹி.ச)

கரூர் மாவட்டம் நஞ்சை புகலூர் மற்றும் நாமக்கல் மாவட்டம் அனிச்சம்பாளையம் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய கதவணைப் பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சுமார் ₹406.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் இந்த கதவணைத் திட்டத்திற்கு 2020 நவம்பரில் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், 2021 பிப்ரவரி முதல் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 1,056 மீட்டர் நீளத்தில், 73 ராட்சத ஷட்டர்களுடன் கதவணை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் 0.8 டி.எம்.சி தண்ணீரை சேமித்து வைக்க முடியும். இதன் மூலம் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் வாங்கல் மற்றும் மோகனூர் வாய்க்கால்கள் வழியாக பாசன வசதி மேம்பட்டு, சுமார் 4,041 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கதவணை கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள், மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினர்.

Hindusthan Samachar / GOKILA arumugam