Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜூலை (ஹி.ச.)
பள்ளிக்கரணை சதுப்புநிலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ச்சி மற்றும் வணிகம் என்ற பெயரில் கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும், சதுப்புநிலத்தின் எல்லைகளை வரையறுத்து அரசிதழில் அறிவித்து பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பள்ளிக்கரணை சதுப்புநிலத்தைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் புதிய கட்டுமானங்களுக்கு தென்னிந்திய பசுமைத் தீர்ப்பாயம் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்ற ரியல் எஸ்டேட் சங்கங்களின் கோரிக்கை சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு காலத்தில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இருந்த பள்ளிக்கரணை சதுப்புநிலம், ஆக்கிரமிப்புகளால் தற்போது 1,725 ஏக்கராக சுருங்கியுள்ளதாகவும், சென்னையை வெள்ளப் பாதிப்பிலிருந்து காக்கும் இயற்கை வடிகாலாக இந்த ஈரநிலம் செயல்படுவதால் அதை எந்த வகையிலும் பாதிக்க அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கரணை சதுப்புநிலம் 2022-ஆம் ஆண்டு ராம்சர் ஈரநிலமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதன் எல்லைகள் மற்றும் தாக்கப்பகுதிகளை தமிழக அரசு இதுவரை வரையறுத்து அறிவிக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள், 2017 மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மாநிலத்தின் 26,883 ஈரநிலங்களின் எல்லைகளை வரையறுத்து அறிவிக்க வேண்டிய கடமையையும் அரசு நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும், ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளையும் மீட்டெடுத்து பாதுகாக்க வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பள்ளிக்கரணை சதுப்புநிலம் 115 வகையான பறவைகள், 46 வகையான மீன்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களின் முக்கிய வாழ்விடமாக இருப்பதால், அதன் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் எல்லைகளை உடனடியாக வரையறுத்து அறிவிக்கை வெளியிடுவதுடன், சென்னை இரண்டாவது பெருந்திட்டத்தில் அதை இணைத்து அனைத்து ஆக்கிரமிப்புகள் மற்றும் புதிய கட்டுமானங்களைத் தடுக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஈரநிலங்களின் எல்லைகளையும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசை அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P