தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி வழக்கு - சங்க நிர்வாகியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை, 09 ஜூலை (ஹி.ச.) முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமானவர் எனக் கூறி, தமிழகம் முழுவதும் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க பொருளாளர் முத்துக்குமார் தாக்கல் செய்த
An


சென்னை, 09 ஜூலை (ஹி.ச.)

முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமானவர் எனக் கூறி, தமிழகம் முழுவதும் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க பொருளாளர் முத்துக்குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார் ஆயிரம் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்து மோசடி செய்ததாக, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் அரசகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சங்கத்தின் பொருளாளர் முத்துக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

வழக்கு விசாரணையின்போது, முன்னாள் அமைச்சர் தனக்கு நெருக்கமானவர் எனக் கூறி இந்த மோசடி நடைபெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. விசாரணை முக்கிய கட்டத்தில் இருப்பதால் முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு, மனுதாரருக்கு முன்னாள் அமைச்சருடனோ, அரசுடனோ எந்தவித தொடர்பும் இல்லை. எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், வழக்கின் தன்மை மற்றும் விசாரணை நிலையை கருத்தில் கொண்டு, முத்துக்குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / P YUVARAJ