Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 09 ஜூலை (ஹி.ச.)
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற வந்த நோயாளி ஒருவருக்கு, மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி இசிஜி எடுத்துள்ள அவலம் நிகழ்ந்துள்ளது.
இந்தக் காட்சிகள் அடங்கிய காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது: மருத்துவமனையில் இரவு நேரம் என்பதால் போதிய செவிலியர்கள் பணியில் இல்லை. பணியில் இருந்த செவிலியருக்கு உதவியாகவே பாதுகாவலர் இசிஜி எடுக்கும் அறையில் இருந்தார் என்று தெரிவித்தனர்.
ஆனால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ நடைமுறைகளை, முறையான பயிற்சி பெறாத பணியாளர்கள் செய்வது நோயாளிகளின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் நீண்ட காலமாகவே மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பற்றாக்குறை நிலவுவதே இத்தகைய சம்பவங்களுக்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதே மருத்துவமனையில் ஏற்கனவே சமையல் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர், நோயாளி ஒருவருக்கு தையல் போடும் காணொலியும் சில மாதங்களுக்கு முன் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து வெளியாகும் இத்தகைய காணொலிகள் அரசு மருத்துவமனைகளின் செயல்பாட்டின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளன.
இதையடுத்து, ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு உடனடியாக போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் தமிழக அரசுக்கும் சுகாதாரத் துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b