Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜூலை (ஹி.ச)
தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்திய முடிவை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனும் தமிழக அரசின் அறிவிப்பை விரைந்து செயல்படுத்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்படும் தனியார் மருத்துவக் கல்லூரிகளால் மாநில ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் பறிபோகும் நிலை – ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவர் கனவை சிதைக்கும் இந்தப் போக்கைத் தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
சென்னை புனித பீட்டர் மருத்துவக் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம், சீனிவாசன் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், மாநில ஒதுக்கீட்டிலிருந்து சுமார் 650 மருத்துவ இடங்கள் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், மதுராந்தகம் கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட மேலும் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது நடைமுறைக்கு வந்தால், மாநில ஒதுக்கீட்டுக்கான மருத்துவ இடங்கள் மேலும் குறைவதுடன், அரசுப் பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்படும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிலும் சுமார் 50 இடங்கள் குறையும் அபாயம் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே மருத்துவப் படிப்புக்கான மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை தனியார் பல்கலைக்கழகங்கள், நிகர் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன.
தற்போது அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடமிருந்து ஆண்டுக்கு சுமார் ₹4 லட்சம் முதல் ₹5.5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அவை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறியவுடன், ஆண்டுக் கல்விக் கட்டணம் ₹20 லட்சம் முதல் ₹35 லட்சம் வரை உயரக்கூடும்.
இதனால் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவராகும் கனவு முற்றிலும் சிதைந்துவிடும் அபாயம் உள்ளது.
ஏற்கனவே அதிக கட்டணம் வசூலிக்கும் நீட் பயிற்சி மையங்கள், தேர்வு முறைகேடுகள், தேர்வு மைய ஒதுக்கீட்டில் ஏற்படும் குளறுபடிகள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் மாணவர்களுக்கு, மாநில ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் குறைவதும், அதனால் மருத்துவச் சேர்க்கைக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் மேலும் உயர்வதும், மருத்துவக் கல்வியை ஏழை எளிய மாணவர்களுக்கு எட்டாக்கனியாக மாற்றும் என கல்வியாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள எந்த தனியார் மருத்துவக் கல்லூரிக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாறுவதற்கான தடையின்மைச் சான்றிதழை
(No Objection Certificate) எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வழங்காத நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இத்தகைய அங்கீகாரங்களை வழங்கியிருப்பது மாநில உரிமைகளையும், மாணவர்களின் நலனையும் பாதிக்கும் நடவடிக்கையாகும்.
இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்திய முடிவை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. அருண்ராஜ் அவர்கள் அறிவித்துள்ளார். அந்த நடவடிக்கைகள் காலதாமதமின்றி உடனடியாக தொடங்கப்பட வேண்டும்.
அதே நேரத்தில், தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைப்பது, ஏற்கனவே செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிப்பது, மாநில ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளையும் மேற்கொள்வது ஆகியவற்றில் தமிழக அரசு உடனடியாக முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b