Enter your Email Address to subscribe to our newsletters

கோவை , 09 ஜூலை (ஹி.ச.)
கோவை மாவட்டம் திருமலையாம்பாளையத்தில் குடோனில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 டன் யூரியா உர மூட்டைகள் சமீபத்தில் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் தன் மீது அவதூறு பரப்புவதாக திருமலையாம்பாளையம் திமுக பேரூராட்சி தலைவர் கவிதா உதயகுமார் நேற்று எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் யூரியா உரத்தை ஒரு தனியார் நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்து கோவை திருமலையாம்பாளையத்தில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி உள்ளது.
பின்னர் இயந்திரத்தின் மூலம் திரவமாக மாற்றி கேரளாவிற்கு அனுப்பியது தெரியவந்தது.
விவசாயிகள் போராட்டத்தால் காவல்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு செய்து குடோனை சீல் வைத்தனர். நிறுவனத்தை நடத்திய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே திருமலையாம்பாளையத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி சிலம்பரசன் என்பவர், இந்த குடோன் திருமலையாம்பாளையம் பேரூராட்சியின் அனுமதியோடு நடந்தது.
பேரூராட்சி தலைவர் கவிதா உதயகுமார் மற்றும் 8வது வார்டு உறுப்பினர் ஆனந்தகுமாருக்கு தெரியாமல் இந்த நிறுவன நடத்த வாய்ப்பில்லை என எங்கள் மீது வீண் பழியை சுமத்தி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்புகிறார்.
எனவே இந்த விவகாரத்தில் எங்கள் மீது அவதூறு பரப்பும் அதிமுக நிர்வாகி சிலம்பரசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA