Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 09 ஜூலை (ஹி.ச.)
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கோயம்புத்தூர் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (ஜூலை 9) பிற்பகல் வெளியிடப்பட்ட தினசரி வானிலை அறிக்கையில், சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்தில் இருந்து வடக்கு கேரளா வரை காற்றழுத்த தாழ்வு பாதை நிலவி வருவதாக கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஜூலை 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழக பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை 11-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை தொடரும் என்றும், ஜூலை 12 முதல் 15 வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லாரில் 180 மில்லிமீட்டர் மழை பதிவானது. சோலையாரில் 110 மி.மீ., சின்கோனா, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் 90 மி.மீ. வரை மழை பதிவாகியுள்ளது.
வெப்பநிலையைப் பொறுத்தவரை, சென்னை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 39.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சமவெளிப் பகுதிகளில் குறைந்தபட்சமாக கோயம்புத்தூர் விமான நிலையத்தில் 22.4 டிகிரி செல்சியஸும், மலைப்பகுதிகளில் உதகமண்டலத்தில் 12.8 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழக கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஆனால் ஆந்திர கடலோரம், வங்கக்கடல், அந்தமான் கடல் மற்றும் அரபிக்கடலின் சில பகுதிகளில் ஜூலை 9 முதல் 13 வரை மணிக்கு 40 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், அந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam