Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத் , 09 ஜூலை (ஹி.ச.)
ஹைதராபாத்,
வரங்கல் மாவட்டம் சென்னாராவுபேட்டை மண்டலம் பாப்பையாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி ஷிரீஷா. இந்த தம்பதி பிழைப்புக்காக ஹைதராபாத்துக்கு வந்து ஹயத்நகர் அருகே உள்ள குன்ட்லூரில் வசித்து வந்தனர்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
ரவிக்குமாருக்கு அருகில் வசித்து வந்த வெங்கட், பிரமீளா ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ரெடிமிக்ஸ் கான்கிரீட் தொழிலில் முதலீடு செய்தால் மாதம் ரூ.20 ஆயிரம் வருமானம் கிடைக்கும் என அவர்கள் கூறியதாக தெரிகிறது.
இதை நம்பிய ரவிக்குமார், தனது மனைவியின் நகைகளை அடகு வைத்து சுமார் ரூ.20 லட்சம் வரை அவர்களிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால், ஆரம்பத்தில் சில மாதங்கள் மட்டுமே பணம் வழங்கப்பட்டதாகவும், பின்னர் அது நிறுத்தப்பட்டதால் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காமல் போனதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கடன் சுமை அதிகரித்து ரவிக்குமார் குடும்பம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதாக தெரிகிறது.
இதற்கிடையே, வெங்கட் மற்றும் பிரமீளா ஆகியோர் தங்களது பெற்றோரை கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தியதாக ரவிக்குமாரின் 14 வயது மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சர்ச்சுக்கு வருமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததாகவும், இதனால் பெற்றோர் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஜூலை 2-ந்தேதி ரவிக்குமார் மற்றும் ஷிரீஷா ஆகியோர் கட்டேசர் ரெயில் நிலையம் அருகே ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
தற்கொலைக்கு முன்பு ரவிக்குமார், வெங்கட்டுடன் தொலைபேசியில் பேசியது தொடர்பான தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வெங்கட் மற்றும் பிரமீளாவை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் தங்கள்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.
முதலில் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, பின்னர் தற்கொலைக்கு தூண்டுதல் என்ற பிரிவின் கீழ் மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
பண மோசடி மற்றும் மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாக கூறப்படும் புகார்கள் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெற்றோரை இழந்த 2 குழந்தைகளும் தற்போது வரங்கலில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA