தஞ்சைக்கு சரக்கு ரயிலில் 2,500 டன் உரம் வருகை - டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு
தஞ்சாவூர், 09 ஜூலை (ஹி.ச.) குறுவை சாகுபடி தீவிரமடைந்து வரும் நிலையில், விவசாயிகளுக்கு உரத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் சென்னை மற்றும் கொச்சியில் இருந்து மொத்தம் 2,500 டன் யூரியா மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் சரக்கு ரயில் மூலம் தஞ்சாவூருக்கு கொண்டு வ
சரக்கு


தஞ்சாவூர், 09 ஜூலை (ஹி.ச.)

குறுவை சாகுபடி தீவிரமடைந்து வரும் நிலையில், விவசாயிகளுக்கு உரத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் சென்னை மற்றும் கொச்சியில் இருந்து மொத்தம் 2,500 டன் யூரியா மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் சரக்கு ரயில் மூலம் தஞ்சாவூருக்கு கொண்டு வரப்பட்டன.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா மற்றும் தாளடி என ஆண்டுதோறும் மூன்று போக நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. வழக்கமாக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி காவிரி நீர் திறக்கப்படுவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் போதுமான அளவில் இல்லாததால் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், பல பகுதிகளில் பம்ப்செட் மோட்டார்கள் மூலம் மட்டுமே குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குறுவை சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் முன்கூட்டியே இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, சென்னை மற்றும் கொச்சியில் இருந்து தலா 1,250 டன் வீதம் யூரியா மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் என மொத்தம் 2,500 டன் உரங்கள் சரக்கு ரயில் மூலம் தஞ்சாவூருக்கு கொண்டு வரப்பட்டன.

பின்னர், அந்த உரங்கள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

குறுவை சாகுபடி காலத்தில் விவசாயிகளுக்கு உரத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தொடர்ந்து போதிய அளவு உரங்களை இருப்பு வைத்து விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam