Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 09 ஜூலை (ஹி.ச.)
ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதில் உள்ள குறைகளை நீக்கி திருத்தப்பட்ட அரசாணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், ஓய்வூதியர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கடந்த 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
புதிய திட்டத்தில், கட்டணமில்லா சிகிச்சைக்கு பதிலாக 'பேக்கேஜ்' அடிப்படையில் சிகிச்சை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு சிகிச்சைக்கும் வழங்கப்படும் தொகை அரசாணையில் வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
முந்தைய காப்பீட்டுத் திட்டங்களில் சிகிச்சைச் செலவில் 30 முதல் 40 சதவீதம் வரை காப்பீட்டு நிறுவனம் வழங்கிய நிலையில், புதிய 'பேக்கேஜ்' முறையில் 15 முதல் 25 சதவீதம் மட்டுமே கிடைக்கும் சூழல் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், மெடிக்கல் மேனேஜ்மென்ட் பிரிவில் இதய அடைப்பு, ரத்த அடைப்பு, தீவிர சுவாசப் பிரச்சினை, டெங்கு உள்ளிட்ட நோய்களுக்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுவதாகவும், மூன்று நாட்களுக்குள் நோயாளியை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும், ஏசி அறை வழங்கப்படாது, பொது வார்டிலேயே சிகிச்சை பெற வேண்டும் என விதிமுறைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், கண்புரை அறுவை சிகிச்சைக்கான உச்ச வரம்பு ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.13 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், ஆஞ்சியோபிளாஸ்டியில் இரண்டு ஸ்டெண்ட் பொருத்தினாலும் ரூ.85 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த காப்பீட்டுத் திட்டம் ஐந்து ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் நிலையில், குறிப்பாக ஓய்வூதியர்களுக்கான திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் குற்றம்சாட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே, புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி, திருத்தப்பட்ட அரசாணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ