Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 09 ஜூலை (ஹி.ச)
தமிழகத்தில் மாணவர்கள் வருகை குறைவால் அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது என்றும், இது மாநிலத்தின் கல்வி வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளும் அபாயம் என்றும், பள்ளிக் கல்வித் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
தவெக ஆட்சி அமைந்து இரண்டு மாதங்களாகியும் கல்வித் துறையில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்றும், இதன் விளைவாக அரசுப் பள்ளிகள் அமைதியாக மூடப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் கல்வி மாவட்டத்தில் 9 அரசுப் பள்ளிகள், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் வால்பாறை அருகே உள்ள ரொட்டிக்கடை மற்றும் சின்கோனா 7-வது டிவிஷன் பகுதிகளில் 2 பள்ளிகள், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் 3 பள்ளிகள், நீலகிரி மாவட்டத்தில் 3 அரசுப் பள்ளிகள் மாணவர்கள் வருகையின்றி மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த திமுக ஆட்சியில் மட்டும் சுமார் 207 பள்ளிகள் மூடப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிப்பதாகவும், தற்போது தவெக ஆட்சியிலும் அதே நிலை தொடர்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் பற்றாக்குறை, ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள், கல்வித் தரத்தை மேம்படுத்தாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாகவும், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரிப்பதை விட தவெக நிர்வாகிகள் ரீல்ஸ் எடுப்பதற்காக பள்ளிகளுக்கு செல்வதிலேயே அதிக கவனம் செலுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று சமூகத்தில் உயர்ந்த நிலைகளில் உள்ள பல அதிகாரிகள், தொழிலதிபர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சாதனையாளர்கள் அரசுப் பள்ளிகளில் படித்தவர்களே என்பதால், இத்தகைய பெருமைமிக்க கல்வி நிலையங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மூடப்படுவது தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறக்கவும் பள்ளிக் கல்வித் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ