Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜூலை (ஹி.ச)
கோவா மாநில காங்கிரஸ் தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடத்தின் முன்னாள் பொறுப்பாளருமான கிரிஷ் ஜோடங்கர், தமிழக முதல்வருடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பில் கூட்டணி கட்சிகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது மற்றும் பொதுக் குறைந்தபட்ச செயல்திட்டத்தின்
(Common Minimum Programme) மூலம் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பயனுள்ள ஆலோசனை நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில், ஆண்டுதோறும் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருத்தலத்திற்கு வருகை தரும் லட்சக்கணக்கான கோவா மாநில பக்தர்களின் வசதிக்காக, வேளாங்கண்ணியில்
கோவா நிவாஸ் அமைக்க வேண்டிய நீண்டகால கோரிக்கையை முதல்வரிடம் வலியுறுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
இதற்காக, கோவா அரசு கோவா நிவாஸ் அமைக்க ஏற்ற நிலத்தை ஒதுக்கித் தருமாறு கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு முதல்வர் விஜய் ஜோசப் உடனடியாக நேர்மறையான பதில் அளித்து, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமாருக்கு நிலம் ஒதுக்கும் நடவடிக்கைகளைத் தொடங்குமாறு அறிவுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கோவா நிவாஸ் திட்டம் நிறைவேறும் வரை, தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் மூலம் கோவா மாநில பக்தர்களுக்கு தங்கும் வசதி ஏற்படுத்தும் வாய்ப்பையும் அரசு பரிசீலிக்கும் என்று முதல்வர் உறுதியளித்ததாக கிரிஷ் ஜோடங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கோரிக்கைக்கு ஆதரவளித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், வேளாங்கண்ணியில் கோவா நிவாஸ் அமைக்கும் நீண்டகால கனவு விரைவில் நனவாகி, லட்சக்கணக்கான கோவா பக்தர்களுக்கு பயனளிக்கும் என்ற நம்பிக்கையையும் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P