Enter your Email Address to subscribe to our newsletters

வயநாடு, 09 ஜூலை (ஹி.ச)
கேரள மாநிலம் வயநாடு அருகே மேப்பாடி கிராம பஞ்சாயத்தில் உள்ள கல்லடி சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் கடந்த ஜூலை 7 ஆம் தேதி காலை 11:15 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. நேற்றைய நிலவரப்படி 3 பேர் உயிரிழந்தனர். 5 தொழிலாளர்கள் காணாமல் போயினர்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை நடைபெற்ற தேடுதல் பணியில் மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டதை அடுத்து, பலி எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிக்கியுள்ளவர்களைக் கண்டறிய NDRF, SDRF, சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி சேவைகள், காவல்துறை குழுக்கள், மோப்ப நாய்கள் மற்றும் சடல மோப்ப நாய்கள் அதிகாரிகளால் களமிறக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் மலைப்பகுதிகளில் மண் தளர்ந்து நிலச்சரிவு ஏற்படும் அபாயம் நீடித்து வருகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், மழை தொடர்வதால் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / vidya.b