சென்னை அருகே 125 செம்மரக்கட்டைகள் பறிமுதல் - போலீசார் தீவிர விசாரணை
சென்னை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னையின் புறநகர் பகுதியான புழலில், வட்டாட்சியர் அலுவலகம் எதிர்ப்புறத்தில் உள்ள புதர் நிறைந்த காலி இடத்தில் நீண்ட நேரமாக மரக்கட்டைகள் கிடப்பதாக பொதுமக்கள் சிலர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையி
125 red sandalwood logs seized


சென்னை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னையின் புறநகர் பகுதியான புழலில், வட்டாட்சியர் அலுவலகம் எதிர்ப்புறத்தில் உள்ள புதர் நிறைந்த காலி இடத்தில் நீண்ட நேரமாக மரக்கட்டைகள் கிடப்பதாக பொதுமக்கள் சிலர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புழல் போலீசார் அங்கு முட்புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மரக்கட்டைகளை சோதனை செய்தனர்.

அப்போது அவை தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, சர்வதேச சந்தையில் கோடிக்கணக்கில் மதிப்புமிக்க செம்மரக்கட்டைகள் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து சுமார் 125 செம்மரக்கட்டைகளை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

கடத்தல்காரர்கள் போலீசாரின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க, அரசு அலுவலகம் எதிரே யாரும் சந்தேகப்பட மாட்டார்கள் என்ற எண்ணத்தில் இந்த கட்டைகளை பதுக்கி வைத்துவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்தது யார், எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, வெளிமாநிலத்திற்கு கடத்த திட்டமிடப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் புழல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b