Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
காவிரி நீர் பிரச்சினையை கையாள்வதில் தமிழக அரசு தோல்வியடைந்துள்ளதாக குற்றம்சாட்டிய முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டாதது முதல் கர்நாடக முதல்வருடனான சந்திப்பு வரை பல்வேறு அம்சங்களில் தமிழக முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் 28 ஆண்டுகள் போராடி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஆணையத்தின் மூலம் குறித்த காலத்தில் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியும், தமிழக அரசு அதனை ஏற்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இரண்டு மாதங்களுக்கு முன்பே உச்சநீதிமன்றத்தை அணுகி காவிரி நீரைப் பெற நடவடிக்கை எடுக்காமல், கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்து தண்ணீர் பெற்று வருவேன் என்ற அணுகுமுறையை முதல்வர் பின்பற்றியதால், அது தமிழகத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அப்பாவு விமர்சித்துள்ளார்.
காவிரி படுகையில் மணல் எடுப்பதற்காக ஆற்றின் வளம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் காவிரி நீர், மேகதாது உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் நடத்தப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அத்துடன், தமிழக மற்றும் கர்நாடக முதல்வர்களின் சமீபத்திய சந்திப்பு காவிரி நீர் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக அல்ல; தொழில் சார்ந்த காரணங்களுக்காகவே நடைபெற்றதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதாகவும் அப்பாவு தனது எக்ஸ் தளப் பதிவில் விமர்சித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ