Enter your Email Address to subscribe to our newsletters

ராணிப்பேட்டை, 01 ஆகஸ்ட் (ஹி.ச.)
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா தாலுகாவிற்கு உட்பட்ட அடூர் மலைப் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் நிலச்சரிவைத் தொடர்ந்து, அரக்கோணத்தில் செயல்பட்டு வரும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) வீரர்கள் தீவிர மீட்பு மற்றும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை மேலாண்மை மையத்தில் இருந்து துணை கமாண்டண்ட் வைத்தியலிங்கம் உத்தரவின் பேரில் 34 பேர் கொண்ட சிறப்பு மீட்புக் குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.
அந்தக் குழுவினர், உள்ளூர் தீயணைப்புத் துறை, காவல்துறை மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளின் போது மண்ணில் புதைந்திருந்த பெண் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நிலச்சரிவால் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என்பதை கண்டறிய இயந்திரங்கள் மற்றும் சிறப்பு உபகரணங்களின் உதவியுடன் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகளை விரைவாக முடிக்க பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.
அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மீட்புப் பணிகளில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / ANANDHAN