கர்நாடக அரசைக் கண்டித்து தஞ்சையில் சிபிஐ ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், 01 ஆகஸ்ட் (ஹி.ச.) கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. அந்த வகையில் காவிரி நீர் த
கர்நாடக அரசைக் கண்டித்து தஞ்சையில் சிபிஐ ஆர்ப்பாட்டம்


தஞ்சாவூர், 01 ஆகஸ்ட் (ஹி.ச.)

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

அந்த வகையில் காவிரி நீர் திறப்பதில் தொடர்ந்து முரண்பாடான போக்கை கடைபிடித்து வரும் கர்நாடக அரசையும், தமிழக விவசாயிகளின் நலனை புறக்கணிக்கும் மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரையும் கண்டித்து தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கோ. சக்திவேல் தலைமை தாங்கினார்.

இதில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கர்நாடக அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் போதிய நீர் வராததாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை உடனடியாக வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Hindusthan Samachar / vidya.b